சூடான சாதத்தில் பருப்புப் பொடி தூவி, நெய் விட்டு பிசையும் போதே பசி பெருகும். ஆந்திரா உணவகங்களில் இந்தப் பொடி (Kandi Podi) வைக்கப்படாத மேஜையே இல்லை. இப்பொடியை ஆங்கிலத்தில் விசித்திரமாக Gun Powder என்றே அழைக்கின்றனர்! நம் ஊரிலும் பலவிதமாக பருப்புப் பொடி செய்தாலும், ஆந்திரச் செய்முறையை அறிந்து, சுவையில் வித்தியாசம் காட்டலாம், வாருங்கள்!
என்னென்ன தேவை?
- துவரம் பருப்பு – 1/4 கப்
- கடலைப் பருப்பு – 1/4 கப்
- சீரகம் – ஒரு டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 10
- காய்ந்த கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
- பெருங்காயம் – சிறிது
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – கால் டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
வெறும் கடாயில் பருப்பு வகைகளை தனித்தனியாக நன்கு வாசம் வந்து சிவக்கும் வரை வறுத்து எடுக்கவும்.
சீரகத்தையும் வெறும் கடாயில் வறுக்கவும். சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயும் கறிவேப்பிலையும் சேர்த்து நன்கு வறுத்து எடுக்கவும்.
சிறிது ஆற விட்டு, உப்பு சேர்த்து அனைத்தையும் அரைத்து, காற்று புகாமல் பாட்டிலில் மூடி வைக்கவும்.
கமகமக்கும் ஆந்திரா ஸ்பெஷல் பருப்புப் பொடி தயார்.
